மனைவியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் விமான நிலையத்துக்குள் நுழைந்த என்ஜினீயர் கைது
சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு சென்ற மனைவியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் நுழைந்த என்ஜினீயரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
போலி டிக்கெட்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் இருந்து ஒருவர் வெளியே செல்ல முயன்றார். அப்போது நுழைவு வாயில் பகுதியில் இருந்த மத்திய தொழிற்படை போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர், "நான், துபாய் செல்ல வந்தேன். ஆனால் பயணம் செய்ய விரும்பாததால் திரும்பி செல்கிறேன்" என கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த மத்திய தொழிற்படை போலீசார், அவரிடம் இருந்த டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்த போது, அது போலி என தெரியவந்தது.
என்ஜினீயர் கைது
உடனே அவரை பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், விருதுநகா் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 43) என்பது தெரியவந்தது. இவா் கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
சசிகுமாரின் மனைவி துபாய் செல்வதற்கான விமான டிக்கெட் வைத்திருந்தாா். அந்த டிக்கெட்டை இவரது பெயரில் போலியாக தயாரித்து அதை காட்டி பயணிபோல் விமான நிலைய உள்பகுதிக்குள் நுழைந்து, மனைவியை வழியனுப்பி வைத்து விட்டு சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு புறப்பாடு பகுதி வழியாக வெளியே வந்தபோது சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய போலீசாா் சசிகுமாரை கைது செய்தனர். அவர் மீது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் போலி ஆவணத்தை காட்டி அத்துமீறி உள்ளே புகுந்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.