ரூ.113½ கோடி வரியினங்கள் வசூல்
திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை ரூ.113½ கோடி வரியினங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது 47.96 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை ரூ.113½ கோடி வரியினங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது 47.96 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
வரி வசூல்
திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி உள்ளது. சொத்துவரி, தொழில்வரி போன்ற வரிகள் மூலம் பெறப்படும் வருவாயை கொண்டு திருப்பூர் மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், நோய்தடுப்பு நடவடிக்கை, பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை மொத்தம் ரூ.79 கோடியே 13 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
47.96 சதவீதம் வரி வசூல்
பின்னர் ஜனவரி மாதம் வரி வசூலிப்பு பணிகளை துரிதப்படுத்தியதன் காரணமாக சொத்துவரி ரூ.66 கோடியே 47 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.15 கோடியே 66 லட்சம் உள்பட மொத்த வரியினங்கள் ரூ.101 கோடியே 83 லட்சம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து வரி வசூலிப்பு பணிகள் நடந்து வருகிறது.
நேற்று வரை மாநகராட்சியில் சொத்துவரி ரூ.73 கோடியே 66 லட்சமும், காலியிட வரி ரூ.2 கோடியே 12 லட்சம், தொழில்வரி ரூ.3 கோடியே 20 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.17 கோடியே 68 லட்சம், வாடகை, குத்தகை இனங்கள் ரூ.3 கோடியே 68 லட்சம், பாதாள சாக்கடை கட்டணம் ரூ.46 லட்சம் என மொத்தம் ரூ.113 கோடியே 58 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாநகராட்சியில் 47.96 சதவீதம் வரியினங்கள் மற்றும் வாடகையினங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் வரி வசூல்
பொதுமக்கள் விடுமுறை நாட்களில் வரி செலுத்த வசதியாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், 4 மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தனம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணினி வரிவசூல் மையங்களில் பணமாகவோ, காசோலையாகவோ செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைந்து செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.