டாஸ்மாக் கடையில் அனைவருக்கும் தெரியும்படி விலைப்பட்டியல் வைக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு


டாஸ்மாக் கடையில் அனைவருக்கும் தெரியும்படி விலைப்பட்டியல் வைக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
x

டாஸ்மாக் கடைகளில் நிரந்தரமாக விலைப்பட்டியல் அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறி இருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, "மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். இந்த அட்டை வைத்து உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். மது பாட்டில்களில் விலை விவரம், புகார் தெரிவிக்கும் எண் போன்றவற்றை தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை எனக் குறைத்து அரசு அறிவித்து கண்காணிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

அவமதிப்பு வழக்கு

இந்த நிலையில் இந்த உத்தரவை 8 மாத காலமாக அமல்படுத்தவில்லை என்றும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு 2 தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளில் மத்திய அரசு வக்கீல்கள் குழு ஆய்வு செய்து, 23-ந் தேதி (அதாவது நேற்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஐகோர்ட்டு நியமித்த வக்கீல் குழுவின் கமிஷனர் தனது அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விலை விவரப்பட்டியலை அனைவருக்கும் தெரியும்படி நிரந்தரமாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.


Next Story