காவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி நேற்று காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மகாளய அமாவாசை
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி, தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இந்நிலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் நீர்நிலைகளில் குவிந்தனர். திருச்சி, ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தர்ப்பணம்
அந்தவகையில் கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று நெரூர் காவிரி ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வருகைபுரிந்தனர்.
பின்னர் காவிரி ஆற்றில் புனித நீராடி தங்களுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பலரும் நீண்ட வரிசையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குடும்பத்துடன் வருகை புரிந்ததால் நெரூர் காவிரி ஆற்றில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
குளித்தலை
குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு கிராம பகுதி மட்டுமல்லாது வேறு பல ஊர்களில் இருந்து அதிகாலையில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடி ஆங்காங்கே அமர்ந்திருந்த அர்ச்சகரிடம் சென்று அமர்ந்து தங்களது தாய்-தந்தை மற்றும் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் பசுமாடுகளுக்கு உணவாக தாங்கள் வைத்திருந்த அகத்திக்கீரையை கொடுத்தனர். இதையடுத்து கடம்பந்துறை காவிரி நதிக்கரைக்கு எதிரே உள்ள பிரசத்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவிலில் சூடமேற்றி வழிபட்டு சென்றனர்.
நொய்யல்
நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினார்கள். பின்னர் தாங்கள் கொண்டு வந்த தர்ப்பணம் பொருட்களான இலையில் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் இலையை தர்ப்பணம் பொருட்களுடன் காவிரி ஆற்று தண்ணீரில் விட்டடனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர். தொடர்ந்து தங்களது வீட்டிற்கு சென்று படையல் போட்டு பூஜைகள் செய்து முன்னோர்களுக்கு சாதம் வைத்து விரதத்தை முடித்தனர்.