திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

மகாளய அமாவாசையையொட்டி திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

விருதுநகர்

மகாளய அமாவாசையையொட்டி நேற்று விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோல திருச்சுழியில் உள்ள குண்டாற்றில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டனர்.திருச்சுழியை சுற்றியுள்ள அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, நரிக்குடி, எம்.ரெட்டியபட்டி, கல்லூரணி, கல்குறிச்சி, மல்லாங்கிணறு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் அதிகாலை முதல் வர தொடங்கினர்.

குண்டாற்றில் தற்போது தண்ணீர் இல்லாததால் அங்குள்ள தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு இருந்தது. இதில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் திருச்சுழி திருமேனிநாதர் கோவிலுக்கு சென்று மோட்ச தீபம் ஏற்றி பொதுமக்கள் வழிபாடு செய்தனர். கோவிலில் உள்ள பசுக்களுக்கு பக்தர்கள் அகத்திகீரை கொடுத்தனர்.

திருமேனிநாதர் கோவிலில் நெரிசல் இன்றி பக்தர்கள் தரிசிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையாக அனுமதிக்கபட்டனர். மகாளய அமாவாைசயையொட்டி சுவாமிக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குகனேஸ்வரன் செய்திருந்தார்.


Next Story