கழிவுநீரை பாலாற்றில் விட்ட தோல் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு


கழிவுநீரை பாலாற்றில் விட்ட தோல் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2023 11:46 PM IST (Updated: 28 Jun 2023 11:47 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே தோல் கழிவுநீரை நேரடியாக பாலாற்றில் விட்ட தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

கழிவுநீர் கலப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தோல்தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக பாலாற்றில் விடுவதாகவும், இதனால் மாசு ஏற்பட்டு பாலாற்றில் மீன்கள் செத்து மடிவதாகவும், தொடர்ந்து விவசாயமும் பாதிக்கப்படுவதாக பொதுமக்களும், விவசாயிகளும் புகார் கூறி வந்தனர்.

கடந்த வாரம் மாராபட்டு என்ற இடத்தில் பாலாற்றில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதே நிலைமை நீடிப்பதால் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் நேரடியாக பாலாற்றில் கலக்கிறதா கலெக்டர் பாஸ்கரா பாண்டியன் உத்தரவின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வரிய அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

மின் இணைப்பு துண்டிப்பு

இந்த நிலையில் வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக பைப் லைன் மூலம் பாலாற்றில் தண்ணீர் விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில் அந்த தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த கம்பெனியை உடனடியாக மூடவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

கொரோனா காலகட்டத்தில் அனைத்து தோல் தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தது. அப்போது பின்புறம் வழியாக சுமார் 50 ஆட்களை கொண்டு இந்த தொழிற்சாலையை இயக்கி வந்தனர். இதனை கண்டறிந்த அப்போதையே வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உடனடியாக கம்பெனியை மூடி சீல் வைத்தார்.

தற்போது தோல் கழிவு நீரை அதே கம்பெனி நேரடியாக பாலாற்றில் விட்டதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலையை மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story