பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்த இளம்பெண்


பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்த இளம்பெண்
x

நெல்லையில் நேற்றிரவு பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்த இளம்பெண் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

திருநெல்வேலி

ஆற்றில் குதித்த இளம்பெண்

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் புதிய பாலத்தில் நேற்று இரவு 9 மணியளவில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்றார். பாலத்தின் நடுவில் சென்ற அவர் திடீரென்று தடுப்புச்சுவரில் ஏறி நின்று, ஆற்றுக்குள் குதித்தார். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே மாநகர போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்கள் உதவியுடன் ஆற்றுக்குள் இறங்கி தேடினர். அப்போது ஆற்று தண்ணீரில் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு, காலில் பலத்த காயங்களுடன் தத்தளித்த இளம்பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

குடும்ப பிரச்சினை

தொடர்ந்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், அவர் தென்காசி எக்ஸ்பிரஸ் சிட்டியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் அறிவழகனின் மனைவி சரண்யா (வயது 32) என்பதும், இவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.

குடும்ப பிரச்சினை காரணமாக சரண்யா, நெல்லை பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். நெல்லையில் இரவில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story