கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம்
மக்களவை தேர்தலில் தமிழிசை போட்டியிடலாம் என தகவல் வெளியான நிலையில் ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தலில் தமிழிசை போட்டியிடலாம் என தகவல் வெளியான நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். இதில் தோல்வி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், அதே ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுவை துணை நிலை கவர்னர் பொறுப்பும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தனது கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி என ஏதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜ.க சார்பில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.