ஜனாதிபதியின் சிறப்பு கொடியை பெற்றது தமிழக காவல் துறைக்கு கிடைத்த பெருமை - விஜயகாந்த்
ஜனாதிபதியின் சிறப்பு கொடியை பெற்றது தமிழக காவல் துறைக்கு கிடைத்த பெருமை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழக காவல்துறை பணியாற்றி வருவதாக பேசப்படும் நிலையில், சென்னையில் நடந்த விழாவில், ஜனாதிபதியின் சிறப்பு கொடி தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட ஒன்பது மாநில போலீசாருக்கு ஜனாதிபதி சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் மாநிலங்களில் முதலாவதாகவும், இந்தியாவில் 10வது மாநிலமாகவும், ஜனாதிபதியின் சிறப்பு கொடி, தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டிருப்பது, ஒட்டு மொத்த காவல்துறைக்கும் கிடைத்த பெருமை. மேலும் தமிழகத்தில் டிஜிபி முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
சட்டம் ஒழுங்கை பாதுகாத்து காவல்துறை உங்கள் நண்பன் என்ற சொல்லுக்கு இணங்க மக்களுக்கும் நாட்டிற்கும் பாதுகாப்பாக இருந்து இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக தமிழக காவல்துறையின் பணிகள் சிறக்க வேண்டும் என பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். தமிழக போலீசாரின் சேவையை பாராட்டி ஜனாதிபதி சிறப்பு கொடி கிடைத்தது போற்றுதலுக்கு உரியது. இது ஒட்டு மொத்த காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.