கம்போடியாவில் வேலை வாய்ப்பா..? இத படிங்க முதல்ல... அப்புறம் முடிவு பண்ணுங்க: காவல்துறை அறிவுறுத்தல்
கம்போடியாவுக்கு வேலை தேடி வரும் இந்தியர்களை, ஆன்லைன் வாயிலாக பண மோசடிகளில் ஈடுபடும் குழுவிடம் போலி ஏஜெண்டுகள் விற்று விடுகின்றனர்.
சென்னை:
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், போலி ஏஜெண்டுகள் மூலம் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. வேலைக்காக ஏஜெண்டுகளிடம் பணம் செலுத்தும்போது வாக்குறுதி அளித்த வேலைக்கு பதிலாக, வெளிநாட்டிற்கு சென்றதும் வேறு வேலையை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தி சிக்கலில் மாட்டி விடுகிறார்கள்.
இவ்வாறு தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்று துயரத்தை அனுபவித்துள்ளனர். கடந்த காலங்களில் கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளில் சிக்கி தவித்த தமிழர்கள் மீட்கப்பட்டனர்.
இதுபோன்ற மோசடியில் சிக்கிவிடாமல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தமிழ்நாடு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பை தமிழ்நாடு காவல்துறை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி, பல்வேறு விசா வாய்ப்புகளை பயன்படுத்தி கம்போடியாவிற்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அவர்கள் இறுதியில் போலியான ஏஜெண்டுகள் அல்லது ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கிவிடுகிறார்கள். அவர்கள், வேலை தேடி வரும் இந்தியர்களை, ஆன்லைன் வாயிலாக பண மோசடிகளில் ஈடுபடும் குழுவிடம் விற்று விடுகின்றனர்.
அந்த கும்பல், இந்தியர்களின் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்து வைத்துக்கொள்வதுடன், குற்றச் செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துகின்றனர். எனவே கம்போடியாவிற்கு வேலை தேடி வரும் இந்தியர்கள், இதுபோன்ற போலி ஏஜெண்டுகள் மற்றும் அவர்களின் போலியான வேலை வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கம்போடியாவுக்கு வருவதற்கு முன்பாக, அந்த ஏஜெண்டுகளின் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் சொல்லும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை, வேலைவாய்ப்பு ஒப்பந்தம் ஆகியவற்றை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.