பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி - முழு விவரம்


தினத்தந்தி 6 May 2024 9:35 AM IST (Updated: 6 May 2024 11:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.

வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு தேர்வு முடிவை வெளியிட்டனர். மொத்தம் 94.56 சதவீதம் பேர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 ஆக அதிகரித்துள்ளது.

7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும்போலவே மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவர்கள் 92.37 சதவீதமும், மாணவிகள் 96.44 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:-

அரசுப் பள்ளிகள்: 91.32 சதவீதம் தேர்ச்சி. அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49 சதவீதம் தேர்ச்சி. தனியார் பள்ளிகள் 96.7 சதவீதம் தேர்ச்சி. 397 அரசுப் பள்ளிகளும், 2,478 தனியார் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

* 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2-ம் இடம் பெற்றுள்ளன.

* 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது.

* 90.47 சதவீதம் தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடத்தை பிடித்துள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in , www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை எந்தவித கட்டணமும் இன்றி அறிந்து கொள்ளலாம் எனவும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story