டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி
டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 சட்ட மசோதாக்களை காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்து அதை அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில் மறுபடியும் அதே மசோதாக்கள் சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் நேற்றே சட்டசபை செயலகம் மூலம் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், திருப்பி அனுப்பப்பட்ட10 மசோதாக்கள், சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் மேற்கொள்கிறார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலையில் டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
கவர்னர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.