தக்காளியை கொள்முதல் விலைக்கே நுகர்வோருக்கு விற்பனை செய்ய தமிழக அரசு திட்டம்
தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் எச்சரித்துள்ளார்.
சென்னை,
அண்டை மாநிலங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில், தக்காளி விலை மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது.
சில பகுதிகளில் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், தக்காளியில் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்த நிலையில், தக்காளி விலை ஏற்றத்தை குறைப்பது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், தக்காளியை கொள்முதல் விலைக்கே நுகர்வோருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாகவும், நடமாடும்காய்கறி அங்காடிகள் மூலமாகவும் கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பனை செய்ய அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
விலை ஏற்றதால் மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க முதல் அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என்றும், தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.