உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பல்கலைக்கழகங்கள் சமூகநீதியையும், புதுமைகளையும் புகுத்தும் இடமாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருச்சி,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்துகள்; தமிழக மக்கள் சார்பில் உங்களை வரவேற்கிறேன். திராவிடக் கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கிய பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம். இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. கல்வியில் சிறந்த என்ற எந்த பட்டியலில் எடுத்தாலும் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். நீதிக்கட்சி ஆட்சியின் திட்டம்தான் தமிழகத்தை உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளது.
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரி கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சி கல்வி என்பதே கொள்கை. இன்னார்தான் படிக்க வேண்டும் என்பதை மாற்றி அனைவரையும் படிக்க வைக்கும் ஆட்சி நடைபெறுகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து தரப்பை சேர்ந்த குழந்தைகளும் உயர்கல்வி படிக்க தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.
மாணவ-மாணவிகளின் திறனை மேம்படுத்தி 1.40 லட்சம் பேருக்கு ஓராண்டில் வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனைத்து வாய்ப்பும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்கலைக்கழகங்கள் சமூகநீதியையும், புதுமைகளையும் புகுத்தும் இடமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.