விஜய் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன் - கே.எஸ்.அழகிரி


விஜய் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன் - கே.எஸ்.அழகிரி
x

மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராக விஜய் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

அரசியலில் திரைப்பட நடிகர்கள் பல ஆண்டுகாலமாக கோலோச்சி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற தலைவர்களைத் தொடர்ந்து, சரத்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் தனித்தனியாக அரசியல் கட்சிகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியிருக்கிறார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். விஜய் அரசியல் கட்சித் தொடங்குவது என்பது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், இன்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

திரைப்படத்துறையில் செல்வாக்குமிக்கவராக கலைப்பணி ஆற்றும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் கட்சியை ஏன் தொடங்குகிறோம் என்பதற்கான அவரது விளக்கம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என்று நம்புகின்றேன். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.



Next Story