தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம்


தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம்
x

கோப்புப்படம்

சட்டசபை முதல் நாளில், மறைந்த உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவி, தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 13 மற்றும் 14-ந் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையும் இடம்பெற்றது.

அதைத்தொடர்ந்து, 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் அதே மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதியும், வேளாண் பட்ஜெட் 20-ந் தேதியும் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டது. 21-ந் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. 22-ந் தேதியுடன், தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பொதுவாக, சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று முடிந்தவுடன் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்ததால், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், வருகிற 24-ந் தேதி சட்டசபை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். ஆனால், அதற்குள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதால், அதற்கு முன்பாக சட்டசபையை கூட்டி, துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது.

அந்த வகையில், தமிழக சட்டசபை இன்று (வியாழக்கிழமை) கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மேலும், கடந்த ஏப்ரல் 6-ந் தேதி மரணம் அடைந்த விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட இருக்கிறது.



இருவேளை நடைபெறும் கூட்டம்

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்க இருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இன்னும் நாட்கள் குறைவாகவே இருப்பதால், சட்டசபை கூட்டம் காலை, மாலை என இருவேளை நடைபெற இருக்கிறது.

முதல் 2 நாட்கள் மட்டும் சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அதன்பிறகு, காலை 9.30 மணிக்கே தொடங்கும். ஒவ்வொரு நாளும் கேள்வி நேரத்துடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் என இருவேளை நடைபெறுகிறது. கூட்டத்தின் நிறைவு நாளான 29-ந் தேதி மட்டும் காலை நிகழ்வுடன் கூட்டம் முடிவடைகிறது.

நீர்வளத்துறை

துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக, நாளை காலை நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆகியவை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பதுடன் புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள். அன்று மாலை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

உயர் கல்வித்துறை

நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது. அன்று மாலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால் வளம் ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.

24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை உயர் கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, பள்ளி கல்வித்துறை மீதும், அன்று மாலை நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி துறைகள் மீதும் மானிய கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.

நெடுஞ்சாலைத்துறை

25-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனத்துறைகள் மீதும், அன்று மாலை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர், கிராமத்தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிர்வாகம், போக்குவரத்து துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதும் மானிய கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.

26-ந் தேதி (புதன்கிழமை) காலை திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, எரிசக்தித்துறை, நிதித்துறை, மனிதவள மேலாண்மைத்துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் துறை மீதும், அன்று மாலை சுற்றுலா, வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, இந்து சமய அறநிலையத்துறை மீதும் மானிய கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.



போலீஸ் துறை

27-ந் தேதி (வியாழக்கிழமை) காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை மீதும், அன்று மாலை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மீதும் மானிய கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.

28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மீதும், அன்று மாலை காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதும் மானிய கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை

29-ந் தேதி (சனிக்கிழமை) காலை காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அவர் பேசி முடித்ததும், இந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.

அத்துடன் சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும். இதற்கான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிடுவார்.


Next Story