அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது - கிருஷ்ணசாமி பேட்டி
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் இன்று சந்தித்து பேசினர்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் இன்று சந்தித்து பேசினர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கிருஷ்ணசாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி என்பது உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க.வின் கூட்டணி மிக வலுவான கூட்டணியாக அமையும். எங்களது விருப்பத்தை அ.தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் எந்த தொகுதியில் போட்டி என்பதை ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளரிடம் கூறுகையில், கிருஷ்ணசாமியின் விருப்பம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைப்போம். இந்தக் கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்" என்றார்.