வாக்குரிமையை கையில் எடுங்கள் - ஜக்கி வாசுதேவ்
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்கும் சக்தியை வீணடிக்க வேண்டாம் என்று ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
இந்தநிலையில் ஜக்கி வாசுதேவ் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தேர்தலில் வாக்களிக்கும் உரிமையையும் பொறுப்பையும் மக்கள் கையில் எடுக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டை வழி நடத்துவது யார் என்பதை நிர்ணயிப்பது தேர்தல். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்கும் சக்தியை வீணடிக்க வேண்டாம். நாம் அதை நடக்கச் செய்வோம். மிகுந்த அன்பும் ஆசிகளும் என பதிவிட்டுள்ளார்.