கடலூரில்நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி
கடலூரில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
நீச்சல் பயிற்சி
தமிழ்நாடு கப்பற்படை பிரிவு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு கடலில் நீந்தவும், பாய்மர கப்பலில் சாகச பயணம் மேற்கொள்ளவும் பயிற்சி அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கப்பற்படை பிரிவு என்.சி.சி. கமாண்டிங் அதிகாரி கமாண்டர் கீர்த்தி நிரஞ்சன் தலைமை தாங்கினார். இதையடுத்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளுக்கு முதற்கட்டமாக நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மொத்தம் 120 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நீச்சல் பயிற்சியை தொடர்ந்து மாணவர்களுக்கு மூச்சு பயிற்சி மற்றும் பாய்மர கப்பல் சாகச பயணம் மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் சிறந்து விளங்கும் 60 மாணவர்கள் மட்டும் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
சாகச பயணம்
இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ-மாணவிகள் புதுச்சேரியில் இருந்து கடலூர் மார்க்கமாக காரைக்கால் அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் காரைக்காலில் இருந்து மீண்டும் புதுச்சேரிக்கு பாய்மர கப்பலில் சாகச பயணம் மேற்கொள்வார்கள். இந்த பயணத்தின் போது கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் உள்ளிட்ட கடற்கரையோரங்களில் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் முக்கிய அதிகாரிகள் மூலம் தினசரி காலை கொடி அசைத்த பின்னரே, அந்த இடத்தில் இருந்து மாணவர்கள் தங்கள் பயணத்தை தொடங்குவார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.