12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு - தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை,
வேலை மசோதா
தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டமசோதா தமிழக சட்டசபையில் கடந்த 21-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தபோதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை கண்டித்து கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்ட, போராட்ட அறிவிப்புகள் வெளியிட்டன.
ஆலோசனை கூட்டம்
இதைத்தொடர்ந்து 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினரின் கருத்துகளை அறியவும் தமிழக அரசு சார்பில் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அனைத்து கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள்.
மசோதா நிறுத்தி வைப்பு
இதையடுத்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமசோதா (சட்டப்பேரவை சட்டமசோதா எண்.8/2023)" என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
12 மணி நேர வேலையை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்ததை அடுத்து, மே 12-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 12-ந் தேதி நடக்கவிருந்த வேலைநிறுத்த அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யூ சவுந்திரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.