பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் மர்மச் சாவு - போலீசார் விசாரணை
திருவாலங்காடு அருகே பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 48). இவர் வியாசபுரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
அந்த ஆடியோவை ஜெயசீலனே சமூக வலைதளத்தில் பரப்பியதாக தெரிகிறது. இந்த ஆடியோ வைரலான நிலையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கடந்த 7-ந் தேதி ஊராட்சி செயலாளர் ஜெயசீலனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ஜெயசீலன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு செல்லும் வழியில் ஜெயசீலன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உறவினர்கள் ஜெயசீலனின் உடலை மீட்டு வீட்டிற்கு எடுத்து வந்தனர். அவரது சட்டை பாக்கெட்டில் சஸ்பெண்டு செய்து கலெக்டர் அனுப்பிய கடிதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவாலங்காடு போலீசார் ஜெயசீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜெயசீலன் சஸ்பெண்டு துக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஜெயசீலனுக்கு மனைவி மற்றும் 2 மகன், ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.