கிருஷ்ணகிரி ஆவின் நிலையத்தில் கலெக்டர் கே.எம்.சரயு ஆய்வு
கிருஷ்ணகிரி ஆவினில் கலெக்டர் கே.எம்.சரயு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய வளாகத்தை மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பால் வரத்து, பால் பதப்படுத்தும் பணிகள், நெய், பால்கோவா, குல்பி, மைசூர்பா, அல்வா, பாதாம் பவுடர், வெண்ணை, மோர், தயிர், பால் பாக்கெட் தயாரிக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
தொடர்ந்து தரக்கட்டுப்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கலெக்டரிடம் பேசிய ஆவின் அதிகாரிகள், கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நாள்தோறும் 77 ஆயிரம் லிட்டர் பால் வரத்து உள்ளது. இதில் 28 ஆயிரம் லிட்டர் உள்ளூர் விற்பனை நடக்கிறது. சென்னைக்கு நாள்தோறும் 40 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் உபரி பாலில் நெய், குல்பி, வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
கழிவுநீர் கால்வாய்
தொடர்ந்து பால் பதப்படுத்தும் இடம், பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரை முறையாக கழிவுநீர் கால்வாய் அமைத்து வெளியேற்றவும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழைநீர் ஆவின் வளாகத்திற்குள் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க கருத்துரு தயார் செய்யுமாறு ஆவின், நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேலன், துணை பொது மேலாளர் நாகராஜ், துணை பதிவாளர் (பால்வளம்) கோபி, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜோதி, பொறியாளர் கொங்கரசன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்திக், தாசில்தார் சம்பத் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.