கடைகளை அடைத்து வியாபாரிகள் ஆதரவு
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரி விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கூக்கல்தொரையில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
கோத்தகிரி
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரி விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கூக்கல்தொரையில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
தொடர் போராட்டம்
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 விலை நிர்ணயிக்க கோரியும், சென்னை ஐகோர்ட்டு தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்று அளித்த தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தியும் கடந்த 1-ந் தேதி முதல் விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இந்திய தேயிலை வாரியம் முக்கிய நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது.
மேலும் மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள், தேயிலை வாரிய அதிகாரிகள் வருகிற 12, 13-ந் தேதிகளில் நீலகிரிக்கு வருகை தருகின்றனர். அதன் பின்னர் இந்த பிரச்சினை குறித்து விளக்கி கூறி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, உரிய முடிவு எட்டும் வரை போராட்டத்தை தொடர்வது என விவசாயிகள் முடிவெடுத்தனர். அதன்படி நேற்று 9-வது நாளாக கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.
கடையடைப்பு
இதில் நடுஹட்டி, ஒசஹட்டி, அரக்கம்பை, அளக்கரை, பெப்பென் கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இதேபோல தொதநாடு சீமை சார்பில், கூக்கல்தொரை கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தை 8 ஊர் தலைவர் தருமன், தொதநாடு சீமை தலைவர் குண்டன், கூக்கல்தொரை தலைவர் தடலி, சீகொலா ரமேஷ், குருமுடி தேவராஜ், கூக்கல் கிருஷ்ணன், தேகிலி போஜாகவுடர், உயிலட்டி பெள்ளி, முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதற்கிடையே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியில் உள்ள கடைகளை வியாபாரிகள் அடைத்து, போராட்டத்தில் கலந்துகொண்டனர். மஞ்சூர் அருகே பிக்கட்டி பகுதியிலும் தேயிலை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.