ரூ.2,893 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான துணை நிலை பட்ஜெட்; சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்
ரூ.2,893 கோடி நிதி ஒதுக்குவதற்கு வழிவகை செய்யும் துணை நிலை பட்ஜெட்டை சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
ரூ.2,893 கோடி நிதி ஒதுக்கீடு
சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2023-2024-ம் ஆண்டிற்கான துணைநிலை பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-
இந்த ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,893.15 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கிறது. இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புது பணிகள் மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு, சட்டசபை ஒப்புதலை பெறுவதும், எதிர்பாராத செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையை அந்த நிதிக்கு ஈடுசெய்வதும் இந்த துணை பட்ஜெட்டின் நோக்கமாகும்.
மாநில பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் சென்னை மாநகராட்சி, கடலூர் மாநகராட்சி ஆகியவற்றிற்கு மழைநீர் வடிகால் அமைக்க ரூ.304 கோடி அரசு அனுமதித்து உள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் திருச்சி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு பங்கு மூலதன நிதியாக ரூ.175.33 கோடியை அரசு அனுமதித்து உள்ளது.
விவசாயிகளுக்கு இடுபொருள்
தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 25 வட்டாரங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் மானிய நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக ரூ.181.40 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இந்த தொகை இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு என்பதின் கீழ் சேர்க்கப்பட்டு உள்ளது.
அரசு போக்குவரத்து நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்குவதற்காக மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு முன் பணமாக ரூ.171.05 கோடி அரசு அனுமதித்து உள்ளது.
அடையாறு கூவம் சீரமைப்பு திட்டம்
அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றங்களுக்கான இயக்கத்தின் கீழ் திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநில மற்றும் மத்திய அரசின் பங்காக ரூ.893.23 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இதற்காக துணை நிலை பட்ஜெட்டில் ரூ.150 கோடியை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை என்பதின் கீழ் சேர்க்கப்பட்டு உள்ளது. மீதி தொகையை மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறு நிதி ஒதுக்கத்தின் கீழ் செலவிடப்படும்.
2023-ம் ஆண்டின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநிலத்திற்குள் உணவு தானியங்களை கையாளுதல் மற்றும் வினியோகித்தல், ரேஷன் கடைகள் மற்றும் முகவர்களுக்கான லாபம் ஆகியவற்றிற்காக மத்திய மற்றும் மாநில அரசின் பங்காக, ரூ.511.84 கோடி அரசு அனுமதித்துள்ளது. தொழில் 4.0 தரநிலையை அடையும் நோக்கில் 46 அரசு பல்தொழில் நுட்பகல்லூரிகளை சீர்மிகு மையங்களாக தரம் உயர்த்துவதற்கு ரூ.277.64 கோடி அரசு அனுமதித்துள்ளது. இதற்காக ரூ.150 கோடி உயர் கல்வித்துறையின் கீழ் சேர்க்கப்பட்டு உள்ளது. மீதி தொகையை மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறு நிதி ஒதுக்கத்தின் கீழ் செலவிடப்படும். அடையாறு நதி மறு சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.139.14 கோடி அரசு கூடுதல் அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.