கருவறைக்குள் சூரிய ஒளி கதிர்கள்படும் அதிசய நிகழ்வு


கருவறைக்குள் சூரிய ஒளி கதிர்கள்படும் அதிசய நிகழ்வு
x
தினத்தந்தி 20 Sept 2022 2:18 AM IST (Updated: 20 Sept 2022 2:38 AM IST)
t-max-icont-min-icon

தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் கருவறைக்குள் மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள்படும் அதிசய நிகழ்வு நேற்று தொடங்கியது.

மதுரை


தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் கருவறைக்குள் மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள்படும் அதிசய நிகழ்வு நேற்று தொடங்கியது.

சூரிய பூஜை

கோவில்களின் கருவறையிலுள்ள மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள் படுவதை சூரிய பூஜை கோவில்கள் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு சூரிய பூஜை கோவில்கள் இருந்தன. தற்போது ஒரு சில கோவில்களே உள்ளன. அந்த வகையில் மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் சூரிய பூஜை கோவிலாகும்.

இங்குள்ள கருவறைக்கு நேர்எதிரே உள்ள 3 துவாரங்கள் வழியாக சூரிய ஒளி கதிர்கள் ஊடுருவி முக்தீஸ்வரப் பெருமானை தழுவி செல்லும். இந்த அதிசய அரிய நிகழ்வு வருடத்திற்கு 2 மாதங்கள் நடைபெறுகிறது. முதலாவதாக மார்ச் மாதத்தில் 11-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் காலையில் 6.35 மணி முதல் 6.45 மணி வரை ஒரு முறையும் 7 மணி முதல் 7.10 மணி வரை ஒரு முறையும் ஒரு நாளைக்கு 2 முறை என 23-ந் தேதி வரை சூரிய ஒளி பூஜை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் 19-ந் தேதி முதல் 30 -ந் தேதி வரை காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை ஒரு முறையும் 6.40 மணி முதல் 6.50 மணி வரை 2-வது முறையும் சூரிய பூஜை நடைபெறும். இந்த சூரிய ஒளி கதிர்கள் மூலவர் மீது விழும் நிகழ்வு இந்த ஆண்டு நேற்று காலை முதல் தொடங்கியது. காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை சூரிய ஒளி மேகமாக இருந்ததால் வர வில்லை. இதனைத் தொடர்ந்து 6.40 மணி முதல் 6.50 வரை சூரிய ஒளி துவாரங்கள் வழியே நந்தி பெருமானை கடந்து மூலஸ்தானத்திற்கு சென்ற படர்ந்தது. தொடர்ந்து சூரிய பூஜை நடந்தது.

சிறப்பு அபிஷேகம்

தொடர்ந்து மூன்று துவாரங்களில் இருந்தும் வரிசையாக ஒவ்வொரு ஒளி கதிர்களாக மூலவர் மீது பட்டுச்செல்லும் நிகழ்வு 10 நாட்கள் நடைபெறும். நேற்று சூரிய பூஜை நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் நமசிவாய நமசிவாய என கோஷங்கள் முழங்க சூரிய பகவானோடு முக்தீஸ்வரரை வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.


Next Story