ஒருதலைக்காதலால் தற்கொலை - மகனுக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை மாரடைப்பால் மரணம்....!


ஒருதலைக்காதலால் தற்கொலை - மகனுக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை மாரடைப்பால் மரணம்....!
x

மதுரை அருகே ஒருதலைக்காதலால் தற்கொலை செய்த மகனுக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை,

மதுரை கீரைத்துறை ஆதி மூலம் பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது ஒரே மகன் சிவானந்த மணி(வயது 21). இவர் திருப்பாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சில வருடங்களாக சிவானந்த மணி அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண் அவரது காதலை ஏற்கவில்லை. இதனால் விரக்தியிலிருந்த சிவானந்த மணி கடந்த சில நாட்களாக யாருடனும் சரியாக பேசவில்லை.

எதையோ இழந்தது போல் இருந்துள்ளார். கல்லூரிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த சிவானந்த மணியிடம் பெற்றோர்கள் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். ஆனால் அவர் எதுவும் இல்லை எனக்கூறி மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் காதல் தோல்வியால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சிவானந்த மணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிவானந்த மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஒரே மகன் என்பதால் கணேசனும் அவரது மனைவியும் அதிக பாசம் வைத்து சிவானந்த மணியை வளர்த்தனர். ஆனால் மகனின் திடீர் தற்கொலை அவர்களை கதிகலங்க செய்துவிட்டது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாணவரின் உடலை குடும்பத்தினரும் போலீசார் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்குகள் நடந்தது. சுடுகாட்டில் தான் பாசமாக வளர்த்த மகனின் உடலுக்கு கணேசன் மனதை கல்லாக்கி தீ வைத்தார். அப்போது அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதைத் தொடர்ந்து உறவினருடன் வீட்டுக்கு வந்த கணேசன், சிறு வயதிலேயே மகன் இறந்து விட்டானே என்று புலம்பியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த கணேசன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.

மகன் இறந்த சோகம் தீராத நிலையில் தந்தையும் மாரடைப்பால் இறந்தது குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவல் அறிந்த கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் சம்பவ இடத்துக்கு வந்து கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

காதல் தோல்வியால் மகன் தற்கொலை செய்து கொள்ள, மகனின் சாவை தாங்கிக் கொள்ளாத தந்தை மாரடைப்பால் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story