போக்சோ வழக்கில் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
போக்சோ வழக்கில் ஜெயிலுக்கு சென்றுவிட்டு ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அம்மாபேட்டை
போக்சோ வழக்கில் ஜெயிலுக்கு சென்றுவிட்டு ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஜெயிலில் அடைப்பு
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மகன் சதீஷ்குமார் (வயது36). இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2-வதாக ராதா பிருந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை 3-வதாக திருமணம் செய்துகொண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருந்து வந்தார்.
அப்போது சதீஷ்குமார் அந்த பெண்ணின் முதல் கணவர் மூலம் பிறந்த மகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஜாமீனில் வந்தவர் தற்கொலை
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.
பின்னர் அவர் 3-வதாக திருமணம் செய்த பெண்ணிடம் அம்மாபேட்டை அருகே கோனார்பாளையத்தில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஜெயிலுக்கு சென்று வந்ததால் சதீஷ்குமார் மனமுடைந்து காணப்பட்டு் வந்தார். இந்தநிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.