அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் அதிர்வு; குடியிருப்புவாசிகள் அலறி அடித்து ஓட்டம் - அதிகாரிகள் விசாரணை


அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் அதிர்வு; குடியிருப்புவாசிகள் அலறி அடித்து ஓட்டம் - அதிகாரிகள் விசாரணை
x

கொரட்டூரில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் திடீர் அதிர்வு ஏற்பட்டதாக கூறி குடியிருப்புவாசிகள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். இதுபற்றி வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை

கொரட்டூர்,

சென்னை கொரட்டூர் கிழக்கு அவென்யூ பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டித்தரப்பட்ட 9 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மொத்தம் 3 பிளாக்குகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 222 வீடுகள் உள்ளன.

நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3 பிளாக்குகளிலும் 8 மற்றும் 9-வது தளத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் திடீர் அதிர்வு ஏற்பட்டதாக கூறி வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கீழே ஓடிவந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு மற்ற வீடுகளில் உள்ள 300-க்கும் மேற்பட்டவர்கள் கீழே இறங்கி வந்து சாலையில் பீதியுடன் திரண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொரட்டூர் போலீசார் மற்றும் வில்லிவாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் குடியிருப்புவாசிகளிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், வீட்டுக்குள் நிலநடுக்கம் போல் அதிர்வு ஏற்பட்டதாகவும், இதில் சில வீடுகளின் சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வானிலை மற்றும் அது தொடர்பான அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதில் அந்த பகுதியில் நிலநடுக்கம் போன்று எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியானது. பின்னர் தீயணைப்பு வீரர்கள், அவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு சென்றனர். அதன்பிறகே நிம்மதி அடைந்த குடியிருப்பு வாசிகள், தங்களது வீடுகளுக்கு சென்று படுத்து தூங்கினர்.

இந்தநிலையில் நேற்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் செயற்பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். மேலும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அந்த கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடம் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு அவ்வப்போது கட்டிடத்தில் விரிசல் ஏற்படுவதாகவும், அதை அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் வீடுகளில் திடீர் அதிர்வு ஏற்பட்டதை குடியிருப்புவாசிகள் உணர்ந்ததாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story