மீஞ்சூர் அருகே வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
மீஞ்சூர் அடுத்து அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையம்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2-வது யூனிட்டில் இரண்டாவது அலகில் உள்ள ஜெனரேட்டர் செயல்பட்டு டிரான்ஸ்பார்மருக்கு மின் கடத்தப்பட்டு தேவையான அளவிற்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மின் உற்பத்தி பாதிப்பு
இந்நிலையில் ஜெனரேட்டரின் டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த அனல் மின் நிலையத்தில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை போராடி அணைத்து வருகின்றனர்.
இதனால் 2-வது யூனிட் இரண்டாவது அலகுகளில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.