'வாட்ஸ் அப்'பில் தகவல் அனுப்பி சப்-இன்ஸ்பெக்டர், வக்கீலிடம் நூதன மோசடி


வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி சப்-இன்ஸ்பெக்டர், வக்கீலிடம் நூதன மோசடி
x

‘வாட்ஸ் அப்’பில் தகவல் அனுப்பி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வக்கீலிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னையை அடுத்த புழல் காவாங்கரை மாரியம்மன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). இவர், சென்னை நுண்ணறிவு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.

நேற்று இவரது 'வாட்ஸ் அப்'பில் ஒரு தகவல் வந்தது. அதில் வங்கி கணக்குகள் சேவை என குறிப்பிட்டு வங்கி கணக்கு தகவல்களை அனுப்புமாறு கேட்கப்பட்டு இருந்தது. வங்கியில் இருந்துதான் கேட்பதாக நினைத்த ராஜ்குமார், தனது வங்கி கணக்கு விவரங்களை அனுப்பினார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல் புழல் புத்தகரம் ரேவதி நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (41). வக்கீலான இவரும் 'வாட்ஸ் அப்'பில் வந்த தகவலை நம்பி தனது வங்கி கணக்கு விவரங்களை அனுப்பினார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.56 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரிந்தது.

மர்ம நபர்கள் 'வாட்ஸ் அப்'பில் தகவல் அனுப்பி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வக்கீலிடம் நூதன முறையில் பணத்தை மோசடி செய்தது தெரிந்தது. இந்த 2 சம்பவம் தொடர்பாகவும் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story