திருநங்கையுடன் பேசியதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை அடித்து உதைத்த சப்-இன்ஸ்பெக்டர் - நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு சம்பவம்


திருநங்கையுடன் பேசியதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை அடித்து உதைத்த சப்-இன்ஸ்பெக்டர் - நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு சம்பவம்
x

சென்னை நுங்கம்பாக்கத்தில், திருநங்கையுடன் பேசிக்கொண்டிருந்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை, போதையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை,

சென்னை திருவொற்றியூர் போக்குவரத்து போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்பவர் ஜெயப்பிரகாஷ் (வயது 27). பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய இவருக்கு, சமீபத்தில்தான் போக்குவரத்து போலீசுக்கு பணி இடமாற்றம் கிடைத்தது. அந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் ஜெயப்பிரகாஷ், நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் தனது புல்லட் மோட்டார் சைக்கிளில் நுங்கம்பாக்கம் வந்த ஜெயப்பிரகாஷ், அங்கு தனக்கு நன்கு பழக்கமான திருநங்கை ஒருவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் சாலை ஓரம் இருட்டில் நின்று நீண்டநேரம் பேசியதால், அந்த வழியாக இரவு ரோந்து வந்த நுங்கம்பாக்கம் போலீஸ் நிலைய போலீஸ்காரர் கதிர்காமனுக்கு (27) சந்தேகம் ஏற்பட்டது. ஜெயப்பிரகாஷ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் இல்லை. இதனால் அவரை சாதாரண நபர் என்று நினைத்து, போலீஸ்காரர் கதிர்காமன் சற்று கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனால் கோபம் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் போலீஸ் கெத்தில், போலீஸ்காரர் கதிர்காமனை கன்னத்தில் அறைந்து தாக்கியதாக தெரிகிறது. இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். மேலும் நிலைமை மோசமானதால், போலீஸ்காரர் கதிர்காமன் தன்னிடம் இருந்த வயர்லெஸ் கருவி மூலம், தான் தாக்கப்படுவதாகவும், உதவி செய்ய வருமாறும், தகவல் அனுப்பினார்.

இதைக்கேட்ட இரவு ரோந்துப்பணியில் இருந்த உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்படையினர் சம்பவ இடத்தில் குவிந்து விட்டனர். உயர் போலீஸ் அதிகாரிகளை கண்டதும், ஜெயப்பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு தான் சப்-இன்ஸ்பெக்டர் என்பதை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார். இந்த சந்தடி சாக்கில், ஜெயப்பிரகாசிடம் பேசிக்கொண்டு நின்ற திருநங்கை நைசாக அங்கிருந்து நழுவினார்.

போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதால், ஜெயப்பிரகாசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவரது உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் ஜெயப்பிரகாஷ் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தன்னை தாக்கியதாக புகார் கூறி, போலீஸ்காரர் கதிர்காமன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

5 போலீஸ்காரர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாக புகார் கூறிய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாசும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.


Next Story