வாடகை வாகனங்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்


வாடகை வாகனங்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
x
தினத்தந்தி 20 Aug 2023 3:00 AM IST (Updated: 20 Aug 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே பள்ளிக்கு செல்ல வாடகை வாகனங்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். கூடுதலாக பஸ்கள் இயக்க அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே பள்ளிக்கு செல்ல வாடகை வாகனங்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். கூடுதலாக பஸ்கள் இயக்க அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அரசு பள்ளிகள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி, அம்பலவயல், அம்பலமூலா ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கொளப்பள்ளி, ஏலமன்னா, நெல்லியாளம் டேன்டீ, குறிஞ்சி நகர், மழவன் சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கூடலூர் கிளை சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லும் நேரங்களிலும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரங்களிலும் அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படுவது இல்லை.

தொங்கிக்கொண்டு செல்லும்...

இதன் காரணமாக மாணவ-மாணவிகள் ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, அந்த வாகனங்களில் தொங்கிக்கொண்டு செல்வதை காண முடிகிறது. இதே நிலைதான், அரசு பஸ்களிலும் நிலவுகிறது.

இந்த ஆபத்தான பயணம் குறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

எங்கள் பகுதிக்கு பள்ளி நேரங்களில் போதிய அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. அப்படியே வந்தாலும் ஒரு பஸ்தான் வரும். அதில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்போது, தொங்கிக்கொண்டு சென்றால், தவறி விழும் அபாயம் உள்ளது.

நடவடிக்கை

இதனால் வாடகை வாகனங்களில் செல்கிறோம். அங்கும் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, தொங்கிக்கொண்டுதான் செல்ல வேண்டி உள்ளது. சிலர், தவறி விழுந்து காயம் அடைந்தும் உள்ளனர். எனவே நாங்கள் பள்ளிக்கு சென்று வரும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story