சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலையை தடுக்க கோரி மாணவர்கள் போராட்டம்..!
சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலையை தடுக்க கோரி மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தினர்.
சென்னை,
சென்னை ஐஐடியில் சில நாட்களுக்கு முன்பாக முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மேற்கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சச்சின் குமார் வேளச்சேரியில் உள்ள வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சமூக வலைதள பக்கங்களில் என்னை மன்னித்து விடுங்கள், இத்துடன் என்னை முடித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார். இவ்விகாரம் தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை ஐஐடி வளாகம் முன்பாக 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி, சச்சின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பி நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சச்சின் மரணத்திற்கு காரணமான அவரின் வழிகாட்டி பேராசிரியர் அகிஷ்குமார் சென், அதை மறைக்க நினைக்கும் மாணவர்களின் டீன் நிலேஷ் வச ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும், எனவும் தற்கொலையை விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆய்வு குழு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்த கல்வியாண்டில் மட்டும் 8 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர், 2 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளனர். பேராசிரியர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே சச்சின் தற்கொலை செய்துள்ளார், இது தற்கொலை அல்ல கொலை என மாணவர்கள் குற்றம் சாட்டினர்.