கீழடி அருங்காட்சியகத்தில் குவிந்த மாணவ, மாணவிகள்
கீழடி அருங்காட்சியகத்தில் பழங்கால பொருட்களை பார்வையிட நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குவிந்தனர்.
திருப்புவனம்
கீழடி அருங்காட்சியகத்தில் பழங்கால பொருட்களை பார்வையிட நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குவிந்தனர்.
கீழடி அருங்காட்சியகம்
தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் திகழ்கின்றன. இந்த பழங்கால பொருட்கள் கீழடியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். இதை தொடர்ந்து கீழடி அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட்டு வந்தனர்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி தினமும் 1500 பேர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர். விடுமுறை காலங்களில் எண்ணிக்கை அதிகரித்து சுமார் 2000 பேர் வரை வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
மாணவ, மாணவிகள்
இங்கு உள்ள குளிரூட்டப்பட்ட மினி தியேட்டரில் கீழடி வரலாறு குறித்து 15 நிமிடங்கள் ஓடும் குறும்படத்தையும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மதுரை, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டுள்ளனர்.
இதுதவிர பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என அதிகம்பேர் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டு சென்றுள்ளனர்.