டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்


டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்
x

கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடந்தது.

புதுக்கோட்டை

டாஸ்மாக் கடை

கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடந்த 2017-ம் ஆண்டு 2 டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் உடைத்து சேதப்படுத்தினர். அதன் பிறகு 2 கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டபோது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

கடையடைப்பு

இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அப்பகுதி பெண்களிடம் சமரசத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் வரை டாஸ்மாக் கடை திறப்பதில்லை என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த நிலையில் அக்டோபர் 2-ந் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் அப்பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்து கொத்தமங்கத்தில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதில், ஏராளமான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஆங்காங்கே ஒருசில கடைகள் மட்டும் திறந்திருந்தன. இந்த போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. அதன்பிறகு கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.


Next Story