ஆபாச ஆடல் பாடல் நடத்தினால் கடும் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை


ஆபாச ஆடல் பாடல் நடத்தினால் கடும் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி, ஆபாச ஆடல்-பாடல் போன்ற இசை நிகழ்ச்சிகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை

இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கோவில் வளாகம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பாதுகாப்பையும், வசதியையும் கருத்தில் கொண்டு பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சாதி ரீதியான ஆடைகள்

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்ற உலோகத்தாலான எந்த பொருட்களையும் கொண்டு வருதல் கூடாது. முத்தாரம்மன் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கடவுள் சம்பந்தப்பட்ட படங்களை பக்தியோடு கொண்டு வருவதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ, பக்தி பாடல்களை இசைப்பதற்கோ, கடவுள் சம்பந்தப்பட்ட பனியன்கள் மற்றும் உடைகளை அணிந்து வருவதற்கோ எவ்வித தடையும் இல்லை.

ஆனால் சாதி சின்னங்களுடன் கூடிய கொடி, தொப்பி மற்றும் ரிப்பன்கள், சாதி ரீதியான உடைகளை அணிந்து வரவோ, காவல்துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ எந்தவித அனுமதியும் இல்லை. அருெவறுக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதற்கோ, நடனம் ஆடுவதற்கோ, அதிக சத்தத்துடன் டிரம்ஸ் அடித்து ஒலி எழுப்பி சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படுத்துவதற்கோ, சாதி சம்பந்தமான கோஷங்கள் மற்றும் இசை ஏற்படுத்தவோ எவ்வித அனுமதியும் கிடையாது. மீறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனங்கள் பறிமுதல்

திறந்த வாகனங்களில் அசாதாரண சூழலில் ஆட்களையோ, பக்தர்களையோ ஏற்றி வந்தால், அந்த வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களுடைய வாகனங்களை புகைப்படம் எடுத்து சட்டப்படியாக நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

கோவிலை சுற்றியுள்ள பகுதியில் கடற்கரை, வாகன நிறுத்தங்கள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் மறைவாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தீவிர கண்காணிப்பு

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களில் வந்து இறங்கி கடற்கரைக்கு சென்று கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பி அவரவர் வாகனங்களுக்கு செல்லும் இடம் வரை சீருடை மற்றும் சாதாரண உடை அணிந்த ஆண், பெண் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

பொதுமக்கள் மற்றும் இதர சிறு வியாபாரிகள் உரிய அனுமதியின்றி சாலையோர கடைகள் அமைத்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்கள் தேங்குகின்ற நிலையை ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இசைநிகழ்ச்சி நடத்தக்கூடாது

காவல்துறை முன் அனுமதியின்றி திருவிழா சம்பந்தமாக கோவில் பகுதிகள் மற்றும் எந்த தனியார் அல்லது பொது இடத்திலும் ஒலிப்பெருக்கி பயன்படுத்தவோ, ஆபாசமான ஆடல் பாடல் போன்ற சினிமா இசை நிகழ்ச்சிகள் நடத்தவோ எவ்வித அனுமதியும் இல்லை. மீறினால் சம்பந்தப்பட்ட இசைக்குழுவினர் மற்றும் அமைப்பாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும்போது அவ்விடங்களில் அதிக நேரம் நின்றுகொண்டு வாணவேடிக்கைகள் நடத்தவோ, நன்கொடை பெறவோ, இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டோ பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது.

ஒத்துழைப்பு

பக்தர்களின் வசதிக்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாகன நிறுத்துமிடங்களை அதிகமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் தசரா பண்டிகையை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகம், இந்து அறநிலையத்துறை மற்றும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story