விதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை


விதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
x

குமரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் பட்டாசு சில்லறை மற்றும் மொத்த விற்பனை உரிமம் பெற்ற இடங்கள், பட்டாசு தயாரிக்க உரிமம் பெற்ற இடங்களை ஆய்வு செய்வது மற்றும் உரிமம் பெறாத இடங்களில் பட்டாசு விற்பனை செய்வதை தடுப்பதற்கும், 18 குறுவட்டங்களுக்கு தாசில்தார்கள், போலீஸ் அதிகாரிகள், தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட குறுவட்ட ஆய்வாளர்களை கொண்ட 18 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இக்குழுவில் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் போது குழு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், கையாளப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து தொழிற்சாலை துணை இயக்குனர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகியோர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.

ஆய்வின் போது பட்டாசு உரிமம் பெற்ற இடத்தில் அல்லாது வேறு இடங்களில் விற்பனை செய்வதோ அனுமதி பெற்ற இடத்தை விட அதிகமான இடங்களில் செட் அமைத்து விற்பனை செய்வதோ கண்டறியப்பட்டால் உடனடியாக அத்தகைய விதிமீறல் நடவடிக்கையில் உள்ள பட்டாசுகளை தீயணைப்பு அலுவலர் வழிகாட்டுதலின்படி பறிமுதல் செய்து பாதுகாப்பாக செயலிழக்க செய்ய வேண்டும்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு வகுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற பட்டாசு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்திட கண்காணிப்பு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story