பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை
நாகையில் பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாகையில் பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை
நாகை, புத்தூர், மஞ்சக்கொல்லை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இளங்கோவன் ஆலோசனையின் படி, புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில் குமார், நவீன்பாலா, ராகுல், தேவகுமார், விக்னேஷ், பாலமுருகன் ஆகியோரை கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புகையிலை தடுப்பு சட்டத்தை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர். இது குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் கூறியதாவது:-
சிறை தண்டனை
புகையிலை கட்டுப்பாடு தொடர்பான சட்டங்களை அமல்படுத்தும் விதமாக ஒவ்வொரு வணிக வளாகங்கள், அலுவலகங்களில் 'புகையிலை பயன்படுத்துதல் தடைசெய்யப்பட்ட பகுதி' என்ற வாசகம் அடங்கிய விளம்பர பலகை வைக்க வேண்டும். சிகரெட் பற்ற வைப்பதற்கு ஏதுவாக எரியூட்டப்பட்ட கயிறு, லைட்டர் ஆகியவற்றை கடைகளில் வைத்திருக்க கூடாது. பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது இல்லை என்ற வாசகம் அடங்கிய விளம்பர பலகையை கட்டாயமாக வணிக வளாகங்களில் வைக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது பொது சுகாதார சட்டங்களை மீறிய உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர்.