சட்டவிரோதமாக நாட்டு வெடி தயாரித்தால் கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை


சட்டவிரோதமாக நாட்டு வெடி தயாரித்தால் கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
x

சட்டவிரோதமாக நாட்டு வெடி தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி

டெங்கு காய்ச்சல்

திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குறிப்பாக 3-க்கும் மேற்பட்ட பாதிப்புள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளோம்.

மேலும், மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர். மேலும் 4 வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

கடும் நடவடிக்கை

மாவட்டத்தில் மொத்தம் 93 பட்டாசு கடைகள் உள்ளன. அவை உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா? என்று கண்காணிப்பை தீவிரப்படுத்தி ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். அரியலூரில் பட்டாசு ஆலையில் நடந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. மாவட்டத்தில் நாட்டு வெடிகள் தயாரித்ததாக சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பட்டாசு விற்க உரிமம் பெற்றுவிட்டு சட்டவிரோதமாக நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story