பணிச்சுமையால் ஏற்பட்ட மன உளைச்சல்: வித்தியாசமாக விடுப்பு கடிதம் கொடுத்த மின் வாரிய அதிகாரி..!
மின்சார வாரிய அதிகாரியின் இந்த வினோத விடுப்பு கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை,
பொதுவாக அரசு துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் விடுப்பு தேவை என்றால் குறிப்பிட்ட காரணங்களை கூறி விடுப்பு எடுப்பது வழக்கம். அதுபோல் விடுப்புக்கான காரணத்தை பொறுத்தே விடுமுறைக்கு அனுமதி அளிப்பது உண்டு.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் மின்வாரியத்தில் பணியாற்றும் உதவி மின் பொறியாளர் ஒருவர் தனக்கு ஒரு நாள் விடுப்பு கோரி உயர் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதம் வினோதமாக இருந்தது.
அந்த கடிதத்தில், "கடந்த சில வாரங்களாக பணியாளர்கள், வாரியத்தினாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும் நடத்தப்படும் விதம் குறித்து பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதால், அதிலிருந்து மீண்டு வந்து வாரிய பணிகளை செவ்வனே தொடரும் வகையில் மன அமைதியை வேண்டி எனது வீட்டிலேயே அண்ணல் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்ய உள்ளதால் எனக்கு ஒரு நாள் விடுப்பு தருமாறு'' தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்தை நேற்று முன்தினம் அளித்து, நேற்று விடுமுறை கோரியிருந்தார். இந்த கடிதத்தை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுபோன்ற காரணங்களுக்கு விடுப்பு தர முடியாது என அதனை நிராகரித்தனர்.
தியானம் செய்ய விடுப்பு கேட்ட மின்சார வாரிய அதிகாரியின் இந்த வினோத விடுப்பு கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.