வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலைகள்; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலைகள்; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x

வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டிக்கு ரூ.66 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவையொட்டி, தனது வாழ்நாளின் முக்கிய நாட்களைக் கோவை சிறையில் கழித்த வ.உ.சி.யின் முழு உருவச்சிலை கோவை வ.உ.சி.பூங்காவில் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதேபோல பெண் சமூகச் சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் உருவச்சிலை அமைக்கப்படும் என்றும், இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் டாக்டருமான முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டையில் உருவச்சிலை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-க்கு கோவை வ.உ.சி. பூங்காவில் ரூ.40 லட்சம் செலவிலும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் உள்ள வரதாச்சாரியார் பூங்காவில் ரூ.16 லட்சம் ரூபாய் செலவிலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் ரூ.10 லட்சம் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள உருவ சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

தியாகி ஈஸ்வரன்

கொங்கு மண்டலத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் நீர்ப்பாசனத் திட்டமான கீழ்பவானி பாசனத் திட்டம் கொண்டுவர முக்கிய காரணமாக இருந்த ஈரோடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சுமார் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவருமான ஈஸ்வரன் நினைவைப் போற்றும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் அவருக்கு உருவச்சிலை மற்றும் அரங்கம்அமைக்கப்படும் என்றும்,

தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் அயராது உழைத்தவரும், சமூகநீதிக் கோட்பாடுகளுக்காகச் சட்டவடிவம் கொடுத்தவரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ப.சுப்பராயன் சேவைகளை நினைவுகூரும் வகையில், அவருக்கு நாமக்கல்லில் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டினார்

அதன்படி, தியாகி ஈஸ்வரனுக்கு, ஈரோடு மாவட்டம் பவானி சாகர் முடுக்கன்துறையில் ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டிலும், முன்னாள் முதல்-அமைச்சர் சுப்பராயனுக்கு நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் வட்டாரம் நவணி தோட்டக்கூர்பட்டியில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள உருவசிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மு.பெ. சாமிநாதன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் த.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காணொலிக் காட்சி வழியாக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story