மாநிலத்தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' 2-ம் கட்ட யாத்திரை 4-ந்தேதி தொடக்கம் - பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம்
மாநிலத்தலைவர் அண்ணாமலையின ‘என் மண், என் மக்கள்’ 2-ம் கட்ட யாத்திரை வருகிற 4-ந்தேதி தொடங்குவதாக பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம், மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமை தாங்கினார்.
இதில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, சரஸ்வதி எம்.எல்.ஏ., துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கணகசபாபதி, கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், சக்கரவர்த்தி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத் உள்பட நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண் என் மக்கள்' என்ற முதற்கட்ட யாத்திரை கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஆகஸ்டு) 22-ந்தேதியுடன் நிறைவுபெற்றது. இந்த யாத்திரையை முடித்த அண்ணாமலைக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
அதன் பின்னர், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தோல்வி கண்டு துவளாமல், வெற்றியை எப்படி சாதிப்பது என்பதற்கு 'சந்திரயான்-3' மிகச்சிறந்த உதாரணம். உலகில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி, இந்திய அறிவினை எடுத்துக்காட்டி, ஒவ்வொரு இந்தியனையும் பெருமை கொள்ள செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து சாதனை படைக்க செய்த, பிரதமர் நரேந்திரமோடிக்கும் கோடானகோடி நன்றிகளும், பாராட்டுக்களும்.
* விழாக்காலங்களில் விலை மலிவு என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் என்பதை நன்கு அறிந்தவர் பிரதமர். 2021-ல், தீபாவளிக்கு பெட்ரோல் விலையை குறைத்தார். இந்த ஆண்டு ரக்ச்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய பரிசாகும். தேர்தலை முன்னிட்டு இல்லாமல், தேவையறிந்து, குடும்ப உறுப்பினரை போல, தேசத்து குடும்பங்களுக்கு இன்பத்தை வாரி வழங்கும் பிரதமருக்கு அனைத்து தாய்மார்கள் சார்பிலும் நன்றி.
* என் மண், என் மக்கள் 2-ம் கட்ட யாத்திரையானது வருகிற 4-ந்தேதி தொடங்க உள்ளது. முதற்கட்டத்தை விட இது இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ''பசி நோக்கார், கண் துஞ்சார்'' என்ற தமிழ் கூற்றினர் போல, அயராது பாடுபடும் தலைவரின் முதற்கட்ட யாத்திரையின் நிறைவுக்கு பாராட்டுக்கள். இரண்டாம் கட்ட யாத்திரைக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.