வீடுகளில் பட்டாசு பதுக்கும் நிலை


வீடுகளில் பட்டாசு பதுக்கும் நிலை
x

சாத்தூர் பகுதிகளில் வீடுகளில் பட்டாசு பதுக்கும் நிலை தொடர்கிறது.

விருதுநகர்

சாத்தூர் தாலுகாவில் உள்ள மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் தனது மனைவி சூரியகாந்தி பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது கடைக்கு தேவையான பட்டாசுகளை, ஆலை நிர்வாகிகளிடம் மொத்தமாக பெற்ற நாராயணசாமி, தனக்கு சொந்தமான வீட்டில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்துள்ளார்.

இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார், நாராயணசாமியின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


இதேபோல் மேட்டமலையில் ரவி என்பவரின் கடையில் அதிக அளவில் பட்டாசு இருப்பு வைத்திருந்ததாக டவுன் போலீசார் ரவியின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் விதிமுறைகள் மீறலை தடுக்க கடந்த சில நாட்களாக பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டு ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் இந்த ஆய்வுக்கு அச்சப்படும் பட்டாசு கடை உரிமையாளர்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை அதிக அளவில் கொள்முதல் செய்து தங்களுக்கு தெரிந்த இடங்களில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து வருகிறார்கள். இதில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்படுவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

எனவே அதிகாரிகள் கடைகள், ஆலைகள் என்று மட்டும் கவனம் செலுத்தாமல் குடியிருப்பு பகுதியில் பட்டாசுகள் பதுக்கல் இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

சிவகாசி பகுதியில் பல்வேறு லாரி செட்டுகளில் தீப்பெட்டி பண்டல்கள் என்ற பெயரில் வெளி மாநிலங்களுக்கு அனுமதியின்றி தயாரிக்கப்படும் பட்டாசுகளை எவ்வித ஆவணங்கள் இன்றி அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லாரி செட்டுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பட்டாசு பண்டல்களுக்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story