விளையாட்டு வீரர்கள் 3 சதவீத இடஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்
விளையாட்டு வீரர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.
3 சதவீத இட ஒதுக்கீடு
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு விளையாட்டு போட்டிகளில் 1.1.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும். சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்கள்.
இணையதளத்தில் விண்ணப்பம்
40 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாட்டினை சார்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 சதவித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து இணையதள முகவரி மூலமாகவோ அல்லது நேரு விளையாட்டு அரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.