முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தென்காசி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 2022 - 2023-ம் ஆண்டிற்கான நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தென்காசி சித்திர சபை நாட்டியாஞ்சலி குரு புருஷோத்தமன் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சிறப்பு நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 1500 வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார் மேலும் சிறப்பாக பணியாற்றிய உடற்கல்வி ஆய்வாளர், உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள், உடற்கல்வி இயக்குனர்கள் ஆகியோர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அரசு ஊழியர்கள் பிரிவில் ஆண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திலகராஜ் என்பவருக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

விழாவில் கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் பேசுகையில், "தென்காசி மாவட்டத்தில் பாட்டாகுறிச்சி கிராமத்தில் உள்விளையாட்டு மற்றும் பன்னோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகள், விளையாட்டு வீராங்கனைகள் நமது மாவட்டத்திற்கு மேலும் பல பரிசுகள் பெற்று பெருமை சேர்க்க வேண்டும்" என்றார்.

விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, உதவி கலெக்டர் லாவண்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story