ஆன்மிகத்தையும், மக்களையும் பிரிக்க முடியாது: தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு


ஆன்மிகத்தையும், மக்களையும் பிரிக்க முடியாது: தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு
x

நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், ஆன்மிகத்தையும், மக்களையும் பிரிக்க முடியாது என கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள சபா மண்டபத்தில் ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மேல்கோட்டை ஸ்ரீயதுகிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதிஸ்ரீ ஸ்ரீயதுகிரியதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சாமி தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

இருமகான்கள்

எனது கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த இரு மகான்களில் ஒருவர் ராமானுஜர், மற்றொருவர் விவேகானந்தர் ஆகும்.

இந்த சமூகத்திற்கு அமைதியை கொண்டுவர வேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். அவரது பணிகள் இந்தியாவில் ஆன்மிக புரட்சியை உருவாக்கியுள்ளது. மதத்தின் திறவுகோல்களாக ராமானுஜரும், விவேகானந்தரும் இருந்தார்கள். உலக மக்கள் அனைவரும் இவர்களது அருமையை உணர்ந்துள்ளார்கள்.

பயங்கரவாதத்தை உருவாக்க முயற்சி

இறை நம்பிக்கை மட்டுமே தெய்வீக குடும்ப சூழ்நிலையை உருவாக்கும். இந்த உரிமைகளை பாரத நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் எப்போதும் வெற்றி பெற முடியாது. ஆன்மிகத்தையும், மக்களையும் பிரிக்க முடியாது.

இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால், பயங்கரவாதம் அடிபணிந்து இருக்கும். நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் கையில் உள்ளது. அவர்களுக்கு கல்வி மிக முக்கியம். நமது நாட்டின் வளர்ச்சி பல நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. விஞ்ஞானம், மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது நாட்டு மக்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.

ஆன்மிக சிந்தனை

ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் பலம். நமது நாட்டின் கலாசாரத்தை பல வெளிநாட்டினரும் பின்பற்றி வருகிறார்கள். அதற்கு காரணம் ஆன்மிக சிந்தனை, தர்மம் உள்ளிட்டவற்றை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா அனைத்திலும் தன்னிறைவு பெற்று முதன்மை நாடாக முன்நிற்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இவ்வாறு கவர்னர் கூறினார்.

இதனைதொடர்ந்து ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாட்டிய நாடகம், ராமர் பிறப்பு நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

ராமானுஜா் சிலை திறப்பு

நிகழ்ச்சியின் 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு பிரதிஷ்டாபன ஹோமம், ராமானுஜர் பாராயணம் மற்றும் மாநாடு நடக்கிறது. பின்னர் மதியம் 12 மணிக்கு விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்.


Next Story