ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் - இந்து சமய அறநிலையத்துறை
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு 200 பயனாளிகளை ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காக 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்கள் என 200 பேரை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறு இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆன்மிகப் பயணம் செல்ல விரும்புவோர் 60 வயது முதல் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், பத்து நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்து வர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது.
ஆன்மிகப் பயணத்தின் போது விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து வரக்கூடாது எனவும், உடன் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது எனவும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டிற்கும் – காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நேற்று தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சி டிசம்பர் 19ஆம் தேதி வரை காசியில் நடைபெறுகின்றது. இலக்கியம், பழங்கால நூல்கள் ஆன்மிகம், இசை, நடனம், கைத்தறி மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள் நடக்கின்றன.