சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை


சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 7 Oct 2023 1:15 AM IST (Updated: 7 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

தாடிக்கொம்புவில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

சொர்ண ஆகர்ஷண பைரவர்

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவர் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியின்போது நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடுவதன் மூலம் நிறைவேறாத பொருளாதாரம் குறித்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

பிரசித்தி பெற்ற இந்த பூஜையில் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபடுகின்றனர். நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு 6 கால சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்களால் வழங்கப்பட்ட பால், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப்பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட பூஜை பொருட்களால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ராஜ அலங்காரம்

தீபாராதனைக்கு பிறகு சொர்ண ஆகர்ஷண பைரவர் அரளி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட அரளி பூக்களை கொண்டு வழிபாடு நடந்தது. பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என கூறி மனமுருகி பிரார்த்தனை செய்தனர். பூஜையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.

பூஜைக்கான ஏற்பாடுகளை தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி உள்ளிட்ட அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் பட்டாச்சாரியார்கள் செய்து இருந்தனர்.


Next Story