சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" சிறப்புத் திட்ட முகாம்
மணலி, மாதவரம் மற்றும் ஆலந்தூர் மண்டலங்களை தவிர மீதமுள்ள 12 மண்டலங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்- அமைச்சரின் உத்தரவின்படி, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு சென்றடையும் வகையில் "மக்களுடன் முதல்வர்" சிறப்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (23-ந்தேதி) "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி, மாதவரம் மற்றும் ஆலந்தூர் மண்டலங்களை தவிர மீதமுள்ள 12 மண்டலங்களில் இன்று (23-ந்தேதி) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம்களில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, எரிசக்தித் துறை, மின்சார வாரியத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நடைபெற உள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை குறிப்பிட்ட வார்ட் மற்றும் முகவாியில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.