ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை


தினத்தந்தி 9 Oct 2023 12:42 AM IST (Updated: 9 Oct 2023 12:43 AM IST)
t-max-icont-min-icon

ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பெரம்பலூர்

ராகு-கேது பெயர்ச்சி

நவக்கிரகங்களில் ராகு-கேது நீங்கலாக மற்ற கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி செல்லும் தன்மை உடையவை. நேற்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெற்றது. அதாவது நேற்று பிற்பகல் 3.39 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர்.

இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ராகு, கேதுவுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நவக்கிரகங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

சிறப்பு யாகம்

இதேபோல் பெரம்பலூர் மதர்சா சாலையில் உள்ள அம்ஸா நாக கன்னியம்மன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் ராகு-கேதுவுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் சொக்கநாதர் கோவிலில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

மேற்கண்ட கோவில்களில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழாவில் பரிகார ராசிக்காரர்களும், நற்பலன் பெறும் ராசிக்காரர்களும் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story